சபை அமர்வு கால அட்டவணையும் நிகழ்ச்சி நிரலும்
கூட்டங்கள் நடைபெறும் திகதிகளும் நேரங்களும்
சபை விதி இலக்கம் 8 இன் படி, சாதாரண சபைக் கூட்டங்கள் மாதத்திற்கு இருமுறை நடைபெறும். சபை வேறு தீர்மானம் எடுக்காவிட்டால், ஒவ்வொரு மாதமும் முதலாவது மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமைகளில் சபை கூடும்.
- சாதாரண கூட்டங்கள்: மு.ப. 9.30 முதல் பி.ப. 2.00 வரை.
- வரவு செலவுத் திட்ட விவாதங்கள்: மு.ப. 9.00 - பி.ப. 1.00 மற்றும் பி.ப. 2.00 - பி.ப. 5.00 வரை.
- ஆளுநரால் கூட்டப்படும் விசேட கூட்டங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்படும் நேரத்தில் தொடங்கும்.
சபைக் கூட்டங்களுக்கான உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் சபை பணிகள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சபைச் செயலாளரினால் தயாரிக்கப்படும்.
உறுப்பினர்கள் விவாதங்களுக்குத் தயாராகும் வகையில் சபை அமர்வுக்கு சில நாட்களுக்கு முன்னரே அஞ்சல் மற்றும் இலத்திரனியல் வழிகளில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
சபை மரபுகளும் அமர்வு ஆரம்பமும்
சபை அமர்வு தொடக்கம்
அழைப்பு மணி ஒலித்த பின்னர், செங்கோலை முன்னிறுத்தி தவிசாளர் சபா மண்டபத்திற்குள் பிரவேசித்தவுடன் சபை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும்.
ஆடை ஒழுங்கு விதி
சபைக் கூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினர்கள் ஐரோப்பிய ஆடை (Lounge Suit), முழுக்கை சட்டை அல்லது இலங்கை தேசிய ஆடையை அணிந்திருக்க வேண்டும்.
சபை மொழிப் பயன்பாடு
சபைப் பணிகள் உத்தியோகபூர்வ மொழிகளிலும் (சிங்களம், தமிழ்) இணைப்பு மொழியான ஆங்கிலத்திலும் இடம்பெறலாம். உடனடி மொழிபெயர்ப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டபூர்வ விதிகள் மற்றும் நிறைவெண்
நிறைவெண்
சபையின் நிறைவெண் மொத்த உறுப்பினர்களின் 1/3 பங்கு ஆகும் (தலைமை தாங்குபவர் உட்பட). நிறைவெண் இல்லாவிட்டால் மணி ஒலிக்கப்பட்டு 5 நிமிடங்களுக்குள் நிறைவெண் எட்டப்படாவிட்டால் சபை ஒத்திவைக்கப்படும்.
தலைமை தாங்குதல்
தவிசாளர் சமூகமளிக்காத போது உப தவிசாளரும், இருவரும் இல்லாத போது தவிசாளர் குழுவிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர் அல்லது சபை தெரிவு செய்யும் உறுப்பினர் தலைமை தாங்குவார்.
தவிசாளர் தெரிவு
தேர்தலின் பின் கூடும் முதல் அமர்வில் தவிசாளரும் உப தவிசாளரும் தெரிவு செய்யப்படுவர். 2002.08.06 திருத்த விதிகளின்படி மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் பெறப்பட வேண்டும்.
உறுப்பினர்களின் ஆசனங்கள்
முதல் கூட்டத்தில் விரும்பிய ஆசனத்தில் அமரலாம் எனினும், பின்னர் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் தவிசாளரினால் உத்தியோகபூர்வ ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
விவாத விதிகள் மற்றும் சபை ஒத்திவைப்பு
விவாதங்களை நடாத்துதல்: சபை விவாதங்கள் பற்றிய விதிகள் நிலையியற் கட்டளைகள் 64 முதல் 67 வரை குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து உரைகளும் தவிசாளரை நோக்கியே நிகழ்த்தப்பட வேண்டும்; தனிப்பட்ட அவதூறுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஒத்திவைப்பும் இடைநிறுத்தமும்: ஒத்திவைப்புப் பிரேரணையை ஓர் அமைச்சர் அல்லது சபை முதல்வர் முன்வைக்கலாம். சபையில் அமைதியின்மை ஏற்பட்டால் ஒழுங்கைப் பேண தவிசாளர் சபையை தற்காலிகமாக இடைநிறுத்தவோ ஒத்திவைக்கவோ முடியும்.